Thursday, November 27, 2008

மும்பை குண்டு வெடிப்பு

மும்பையில் தீவிரவாதிகள் மற்றும் போலீசாருக்கு இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் நிலையில், அந்த பகுதிகளில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இன்றும் குண்டுவெடிப்பு:

மும்பை டிரிடன்ட் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலையும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் வெடிகுண்டு இன்று காலை வெடித்து சிதறியது. இதில் ஒட்டல் ஊழியர்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

கொலாபாவில் துப்பாக்கி சண்டை:

மும்பை, கொலாபா பகுதியில் நாரிமன் ஹவுசில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அங்கு சுமார் 40 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவம் மற்றும் போலீசார் போராடி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பக்கத்து கட்டடத்தில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தவர்கள் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடத்தை சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் ஓட்டலில் சண்டை:

மும்பை தாஜ் ஓட்டல் உள்ளே சுமார் 15 வெளிநாட்டுப் பயணிகளை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். இதன் பலனாக ஓட்டலில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு 4 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். பிணைக்கைதிகளில் 3 எம்பிக்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பகுதிகளை சுற்றி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை:

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக மத்திய அமைச்சரவை இன்று அவரசமாகமாக கூடி ஆலோசனை நடத்துகிறது. பாதுகாப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

பலி எண்ணிக்கை 101 ஆனது:

மும்பையில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டபடி உள்ளன. 10க்கும் அதிகமான இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 7 உயரதிகாரிகள் உட்பட 12 போலீசார் பலியாகியுள்ளனர். 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 101 தாண்டியுள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.

இந்த தாக்குதலின் போது, பல தீவிரவாதிகள் காரில் தப்பியோடிவிட்டனர். அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் போலீசார் 9 தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்ததுள்ளதாகவும் தெரிகிறது.

குண்டுகள் செயலிழப்பு :

இதற்கிடையே, கேட் வே ஆப் இந்தியா பகுதியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தீவிரச் சோதனையில் அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கவைக்கப்பட்டன.

கடல்மார்க்கமாக வந்த தீவிரவாதிகள்:

பலத்த பாதுகாப்பு மிகுந்த மும்பை நகரில், இந்த முறை கடல் வழி மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அது தீவிரவாதிகள் படகாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

சிவராஜ் பாட்டீல் விரைந்தார்:

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தப்பிய கொரியா வர்த்தகர்கள்:

தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, ஓட்டலின் மேல் மாடியில் கொரிய நாட்டு வர்த்தகர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்த நிலையில், சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

தேஷ்முக் கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும், கேரள மாநிலத்தில் இருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக மும்பை விரைந்தார். சம்பவங்களை கேட்டறிந்த அவர், 'தீவிரவாதிகளின் பிடியில் உள்ள தாஜ் ஓட்டல் மற்றும் டிரிடண்ட் ஓட்டலில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், நிலைமையைச் சமாளிக்க தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை வருவதாகவும்' அவர் கூறினார்.

பங்குச்சந்தை மூடல்:

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையும் இன்று மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தீவிரம்:

மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், கோல்கத்தா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. சென்னையிலும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

தற்சமயம் பார்ப்போர்